Friday, 22 July 2016

லக்ஷ்மி விலாஸ் வங்கி லாபம் 50% அதிகரிப்பு



தனியார் துறையைச் சேர்ந்த லக்ஷ்மி விலாஸ் வங்கியின் நிகர லாபம் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் 50.72 சதவீதம் அதிகரித்தது.

இதுகுறித்து அவ்வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பி.முகர்ஜி தெரிவித்ததாவது:

நடப்பு 2016-17-ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) லக்ஷ்மி விலாஸ் வங்கியின் மொத்த வருமானம் ரூ.774.87 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருமானம் ரூ.693.06 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 11.80 சதவீத வளர்ச்சியாகும்.

குறிப்பாக, வங்கியின் வட்டி வருவாய் ரூ.614.09 கோடியிலிருந்து 11.65 சதவீதம் அதிகரித்து ரூ.693.06 கோடியாக இருந்தது. மேலும், வட்டி வருவாய் 12.97 சதவீதம் உயர்ந்து ரூ.89.21 கோடியாக இருந்தது.

நிகர லாபம் ரூ.40.26 கோடியிலிருந்து 50.72 சதவீதம் அதிகரித்து ரூ.60.68 கோடியாக காணப்பட்டது. லக்ஷ்மி விலாஸ் வங்கியின் மொத்த வர்த்தகம் 19 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.46,178.58 கோடியாக இருந்தது.

இதில் திரட்டிய டெபாசிட் 16.89 சதவீதம் உயர்ந்து ரூ.58,995.86 கோடியாகவும், வழங்கிய கடன்கள் 21.86 சதவீதம் அதிகரித்து ரூ.20,182.72 கோடியாகவும் இருந்தன.ஜூன் இறுதி நிலவரப்படி வங்கியின் மொத்த மற்றும் நிகர வாராக் கடன் விகிதம் முறையே 2.14 சதவீதம் மற்றும் 1.30 சதவீதம் என்ற அளவில் காணப்பட்டது.

லக்ஷ்மி விலாஸ் வங்கிக்கு நாடு தழுவிய அளவில் உள்ள 460 கிளைகள் மூலம் 28.50 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு நிதி சேவைகளை வழங்கி வருகிறது. மொத்த ஏடிஎம்களின் எண்ணிக்கை 923-ஆக உள்ளது.

வாடிக்கையாளர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சேவைகளை வழங்குவதில் வங்கி தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மேலும், கிளைகள், ஏடிஎம்களின் எண்ணிக்கைகளை அதிகரிக்கவும் கணிசமாக முதலீடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.

No comments:

Post a Comment